கரந்தை மலை - மலையூர்

அமைவிடம் - கரந்தை மலை - மலையூர்
ஊர் - கரந்தை மலை - மலையூர்
வட்டம் - நத்தம்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - மேலைப் பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள்
கிடைத்த தொல்பொருட்கள் - மேலைப் பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2013
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

மலையூருக்கு மேற்கில் உள்ள மலையில் அய்யனார் அருவி தோன்றி பெரிய மலையூருக்கு கிழக்கே அய்யனார் ஓடை மற்றும் பாலாறு என்று பிரிகின்றது. இவ்விரண்டு நீர்நிலைகளால் மலைக்கு கிழக்கே நிலப்பகுதிகளை செழிக்க வைக்கின்றன. அய்யனார் ஓடையில் பழைய மற்றும் நுண் கற்காலக்கருவிகளும், உடைந்த கற்கருவிகளும் மிகுதியாகக் கிடைக்கின்றன. அய்யனார் ஓடைப்பகுதி நுண் கற்காலக்கருவிகளின் தொழிற்கூடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம், நத்தத்திலிருந்து அய்யனார்புரம் சென்றால், அய்யனார்புரத்திலிருந்து மலைப்பாதையில் 7கி.மீ. தொலைவில் மலையூர் அமைந்துள்ளது. பெரிய மலையூர், சின்ன மலையூர் என்ற இரு ஊர்களாக மலையூர் காணப்படுகின்றது. கரந்தை மலையில் நிலமட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் கரந்தை மலையில் கிழக்கே அமைந்துள்ள மலையூர் மலைவாழ் பழங்குடி மக்களைத் தன்னகத்தே கொண்ட மலைவாழிடமாகும். இவ்வூரில் வலையர் இன மக்கள் (1000 தலைக்கட்டுகள்) அதிகமாக வாழ்கின்றனர். மேலும் செட்டியார் (வடுகச் செட்டி) இனத்தவரும் முற்காலத்தில் வாழ்ந்துள்ளனர். மலைப்பாதையில் பண்டு முதல் இன்று வரை குதிரைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் பொருட்களை மலையூருக்கு எடுத்துச் செல்கின்றனர். மலையூருக்குச் செல்லும் இப்பாதை பண்டு வணிக வழியாகவும் இருந்துள்ளது. மலையூருக்குச் செல்லும் இவ்வழியில் அய்யனார் கோயில் ஒன்று காணப்படுகின்றது. அய்யனார், பூரணை, புஷ்கலை சிற்பங்கள் இக்கோயிலில் வழிபாட்டில் உள்ளன. மலையூரிலும் செட்டியார் வீடுகள் சில உள்ளன. மலையூரின் மேற்கிலிருந்து கரந்தமலையில் அய்யனார் ஓடை உற்பத்தியாகி ஓடுகிறது.